ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பில் 3 ஆண்டுகளாக கடந்த 2016 செப்டம்பர் வரை ரகுராம் ராஜன் இருந்தார்.
ஹைலைட்ஸ்
- நாடாளுமன்ற குழுவிடம் மோசடி செய்தவர்கள் பட்டியலை அளித்துள்ளார்
- குறைவான வளர்ச்சி குறித்து வங்கி மற்றும் அரசை விமர்சித்துள்ளார்
- மத்தியில் அமையும் அரசுகள் மந்த கதியில் செயல்படுகின்றன – ராஜன்
New Delhi: புதுடெல்லி: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ராகுராம் ராஜன் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளின் பட்டியலை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பியதாகவும், அந்த பட்டியல் பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
முரளி மனோகர் ஜோஷி நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருந்தபோது, ரகுராம் ராஜன் அறிக்கையை அளித்துள்ளார். வங்கிக் கடன் பிரச்சனைக்கு வங்கிகளின் அதீத நம்பிக்கையும், மத்திய அரசின் மந்தமான போக்கும், குறைந்த வளர்ச்சியும் காரணம் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். மேலும் அவர் தனது அறிக்கையில், பொதுத் துறை வங்கிகளில் கடனை பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் கவர்னராக இருந்தபோது மோசடியைக் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தேன். அந்த அமைப்பு அவ்வப்போது விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு பட்டியலை அனுப்பியிருந்தேன். அதில் மோசடி செய்த அதி முக்கிய புள்ளிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதன்மீது நடவடிக்கை எடுத்தார்களா இல்லையா என்பதுபற்றி எனக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, மோசடி செய்தவர்கள் மீது பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டுள்ளது. வராக்கடன் ரூ. 2.83 லட்சம் கோடிகளாக இருக்கும்போது, ரூ. 12 லட்சம் கோடிக்கு வங்கிக் கடன் கொடுத்தது ஏன் என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ரகுராம் ராஜன் அளித்திருக்கும் அறிக்கையில் பண மோசடியை தடுப்பது தொடர்பான ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன. பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக திறனை மேம்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தலையீடுகளை பொதுத்துறை வங்கிகளில் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பண மோசடியை குறைக்க முடியும் என்று ராஜன் தெரிவித்துள்ளார்.