ராகுல் இன்று எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
New Delhi: மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். மொத்தம் 542 உறுப்பினர்கள் 2 நாட்களில் பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முற்பகலில் அவைக்கு வரவில்லை. இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி எங்கே போனார் என்று கேட்க, அவையில் சலசலப்பு நிலவியது.
தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். இதன்பின்னர் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மோடி பதவியேற்க வந்தபோது பெரும்பாலான உறுப்பினர்கள் 'மோடி, மோடி' என்று கோஷம் எழுப்பினர். இதன்பின்னர் இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராம்தாஸ் அத்வாலே, ராகுல் காந்தி எங்கே போனார் என்று கேட்டார். இதன்பின்னர் உறுப்பினர்கள் ராகுல் எங்கே சென்றார் என்று கேட்க, அவையில் சலசலப்பு நிலவியது.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள், 'ராகுல் இங்குதான் இருக்கிறார். இப்போது வந்துவிடுவார்' என்று பதில் அளித்தனர். ஆனால் நீண்டநேரமாக ராகுல் காந்தி அவைக்கு வரவில்லை.
காங்கிரசுக்கு இந்த முறை மொத்தம் 52 இடங்கள் கிடைத்துள்ளன. இது கடந்த ஆண்டு எம்.பி.க்கள் எண்ணிக்கையான 44-யை விட சற்று அதிகமாகும். இருப்பினும் மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த முறை தோல்வியை தழுவினர்.
ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி இரானியும் எம்பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பாஜக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.