தாடியாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
Datia: ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில், இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தாடியா மாவட்டத்திலுள்ள பீதாம்பர பீத் கோவிலில் பிரார்த்தனை செய்தார். அவர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் குவாலியரிலிருந்து தாடியா மாவட்டத்தை அடைந்தார். பூஜைக்கு பிறகு அரை மணிநேரம் கோவிலில் இருந்தார்.
ராகுல் காந்தியுடன் அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உடன் இருந்தார்கள். சிந்தியா, கோயில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளை ராகுல் காந்திக்கு அறிமுகப்படுத்தினார்.
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று மாலையில் காங்கிரஸ் கட்சித்தலைவர் தாடியா மாவட்டத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பீதாம்பர பீத் கோவிலுக்கு பல பிரபலமான கட்சித் தலைவர்கள் வந்துள்ளார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
1979ம் ஆண்டு இந்திரா காந்தி இந்தக் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளார். பிறகு 1980ல் பிரதமரான பின் மீண்டும் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். ராஜுவ் காந்தி 1984-85ல் பிரதமரான பின் சக்தி பீத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு உடல்நிலை மோசமாக இருந்தபோது, அவர் உடல்நிலை விரைவில் குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்பதி திரிபாதி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். இவ்வாறு பீதாம்பர பீத் கோயில் குறித்து பங்கஜ் சதுர்வேதி நினைவு கூர்ந்துள்ளார்.