This Article is From Mar 04, 2020

'இந்தியாவின் புகழ் பாதிக்கப்பட்டு விட்டது' - டெல்லி வன்முறை குறித்து ராகுல் கடும் விமர்சனம்

ராகுல் மீண்டும் கட்சித் தலைவராக வருவார் என தகவல்கள் பரவின. இவற்றில் உண்மையில்லை என்றும், மீண்டும் அவர் கட்சித்தலைவராக விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அநேகமாக ஏப்ரல் மாதத்தில் காங்கிரஸ் தலைமை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெள்ளை நிற பேருந்தில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் வந்தனர்.

ஹைலைட்ஸ்

  • வன்முறையால் பாரத மாதாவுக்கு பலன் இல்லை என்கிறார் ராகுல்
  • அன்பு, சகோதரத்துவம் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக ராகுல் கருத்து
  • ஏப்ரலில் காங்கிரஸ் தலைமை குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரலாம்
New Delhi:

டெல்லி வன்முறையால் இந்தியாவின் புகழ் பாதிக்கப்பட்டு விட்டதாக வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதியை ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

தலைநகரில் ஏற்பட்ட வன்முறையால் இந்தியாவின் புகழ் பாதிக்கப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு ஆகியவை இங்கு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இது இந்துஸ்தானுக்கும், பாரத மாதாவுக்கும் ஏற்பட்ட இழப்பு. உலகளவில் இந்தியாவின் நற்பெயர் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. 

இந்த வன்முறையால் பாரத மாதாவுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த துயரமான நேரத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 4 நாட்கள் நடந்த டெல்லி வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

வெள்ளை நிற சுற்றுலாப் பேருந்தில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் நிர்வாகிகளும் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். ராகுலிடம் பிரதமர் மோடி சமூக வலை தள கணக்குகளை மூடுவதாக தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், 'வெறுப்பை தூண்டுபவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும். சமூக வலைதளக் கணக்குகளை நிறுத்தத் தேவையில்லை' என்று பதில் அளித்தார். 

டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஹோலிக்கு பின்னர் இதுபற்றி விவாதம் நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதில் அளித்தார். இது எதிர்க்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்ததால் அவைகள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டன. 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்ததில் இருந்து, கட்சி தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் மக்களை சந்திப்பதை அவர் குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறார் ராகுல்.

முன்னதாக ஜாமியா பல்கலைக் கழகத்தில் வன்முறை நடந்தது, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த போராட்டம் ஆகியவற்றில் ராகுல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வதை கிண்டலடித்துள்ள மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, ராகுல் காந்தி தனது மொபையில் ரோமிங் பேக்கை ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

இதற்கிடையே, ராகுல் மீண்டும் கட்சித் தலைவராக வருவார் என தகவல்கள் பரவின. இவற்றில் உண்மையில்லை என்றும், மீண்டும் அவர் கட்சித்தலைவராக விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அநேகமாக ஏப்ரல் மாதத்தில் காங்கிரஸ் தலைமை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.