This Article is From Dec 26, 2018

நடுத்தர குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதிலளிக்காத மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரதமர் மோடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதில்லை. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

நடுத்தர குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதிலளிக்காத மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு மோடி பதிலளிக்கவில்லை என்று ராகுல் விமர்சித்துள்ளார்.

New Delhi:

நடுத்தர குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க தவறி விட்டார் என்று, பாஜக தொண்டரின் கேள்வியை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 19-ம் தேதி மோடியுடன் நடந்த கலந்துரையாடலின்போது நிர்மல் சிங் என்ற பாஜக தொண்டர், நடுத்தர மக்களிடம் பல்வேறு வரிகளை வசூலிப்பதில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் வருமான வரியில் எந்த வித சலுகையையும் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், நடுத்தர குடும்பத்தினரை பிரதமர் மோடிதான் பாதுகாக்க வேண்டும் என்று நிர்மல் சிங் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த மோடி, நன்றி நிர்மல்ஜி. நீங்கள் ஒரு வர்த்தகர். எனவே நீங்கள் வியாபாரம் பேசுவது என்பது இயல்புதான். நான் சாதாரண மக்களை பாதுகாப்பதற்கு பொறுப்பு ஏற்றிருக்கிறேன். அவர்களை பாதுகாப்பேன் என்று கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், நடுத்தர மக்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல மாட்டார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து விட்டார். அவர் கட்சியை சேர்ந்த அடிமட்ட தொண்டன் கேட்ட கேள்விக்கே பதில் சொல்லவில்லை என்று விமர்சித்துள்ளார்.

கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடியை விமர்சித்திருந்தார். மன்மோகன் ஆட்சியில் இருந்தபோது அவர் வாய்பேசாத பிரதமர் என்று பாஜகவினர் விமர்சித்திருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மன்மோகன் சிங், நான் என்னை பேசாத பிரதமர் என்று அழைத்தனர். 

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பயந்த பிரதமர் நான் கிடையாது. நான் வழக்கமாக பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பேன். வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னரும் வந்த பின்னரும் நான் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறேன் என்று கூறினார்.

.