Election results 2018: இனி தேர்தல்களை வெல்வது மோடிக்கு சிரமமாக இருக்கும், ராகுல் காந்தி
ஹைலைட்ஸ்
- மோடி ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று மக்கள் நினைக்கின்றனர், ராகுல்
- மக்களின் குரலுக்கு மோடி செவிமடுக்கவில்லை, ராகுல்
- காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தான் வெள்ளி சமர்ப்பணம், ராகுல்
New Delhi: நேற்று 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை பிரதமர் மோடியிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்' என்று பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், மத்திய பிரதேசத்தில் 2 இடங்களால் பெரும்பான்மை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் பாஜக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது காங்கிரஸ்.
தெலங்கானாவில், சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ், மாபெரும் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மிசோரமில் காங்கிரஸை வீழ்த்தி, மிசோ தேசிய முன்னணி அட்சி அரியணையில் அமர்ந்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசுகையில், ‘இனி தேர்தல்களை வெல்வது மோடிக்கு சிரமமாக இருக்கும். அவர் மக்களுக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதை நிறைவேற்ற முடியாது என்று தற்போது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் ஆகிய வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. அதை மக்களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் தற்போது, பிரதமரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக வாக்காளர்கள் நம்புகின்றனர். இந்த முடிவு அதன் வெளிப்பாடுதான்.
என் அன்னையிடம் நான் ஒன்றை சொன்னேன். எனக்கு 2014 லோக்சபா தேர்தல் தான் அதிக பாடம் புகட்டின. அப்போது, இருப்பதிலேயே மிகப் பெரிய விஷயம் மனிதத்தன்மைதான் என்பதைப் புரிந்து கொண்டேன். வெளிப்படையாக சொல்வதென்றால், நரேந்திர மோடிதான் என்ன செய்யக் கூடாது என்பதில் எனக்குப் பாடம் புகட்டினார். பிரதமர் மோடிக்கு, மக்கள் மிகப் பெரும் வெற்றியைக் கொடுத்திருந்தனர். ஆனால், அவர் மக்களின் குரலுக்கு செவி மடுக்காமல் இருந்தது மிகப் பெரிய வருத்தமே.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் குழப்பம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, ‘முதலில், 3 மாநில தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது' என்றார் திட்டவட்டமாக.