Chennai: தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், ‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் ராகுல் காந்திக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும், ‘ராகுல் காந்தியுடன் நேற்று வெளிப்படையாக பல விஷயங்கள் குறித்து பேச முடிந்தது. அதற்கு அவருக்கு நன்றி. எங்கள் உரையாடல் முடியும் தறுவாயில், பேரறிவாளன் விடுதலை குறித்து கேட்டேயாக வேண்டும் என்று தோன்றியது. அவரிடம் அது குறித்து கேட்டேன். ‘உங்களுக்கு பேரறிவாளனை விடுதலை செய்வதில் எதாவது தயக்கம் இருக்கிறதா?’ என்றேன். அதற்கு அவர் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றார். இன்னும் சொல்லப் போனால், பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்வதாகக் கூட சொன்னார்’ என்றவர் தொடர்ந்து,
‘ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் வாடி வருகிறார். அது மிகவும் துயரம் தரும் விஷயமாகவே எனக்கு இருக்கிறது. ஆனால், அவரின் தாய் அற்புதம்மாள், தன் மகனுக்காக தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகள் அசாதரமானவை’ என்று கூறினார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தொடர் வெற்றித் திரைப்படங்களை இயக்கி குறைந்த காலத்தில் உச்சம் தொட்டவர் இயக்குநர் பா.ரஞ்சித். சினிமாவில் மட்டுமல்லாமல், தொடர்ந்து அரசியல் தளத்திலும் இயங்கி வருபவர் ரஞ்சித். குறிப்பாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக அரசியலை வெள்ளித்திரையில் பிரதிபலிக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரும், நடிகர் கலையரசனும் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி, ‘காலா, கபாலி, மெட்ராஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன். சினிமா, சமூகம் மற்றும் அரசியல் குறித்து நாங்கள் உரையாடினோம். அவர்களுடனான கலந்துரையாடலை நான் மிகவும் விரும்பினேன். தொடர்ந்து இதைப் போன்ற சந்திப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்’ என்று ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.