'எனக்கெதிராக வழக்குத் தொடரும்போது, என் நெஞ்சில் பதக்கத்தை குத்துகிறார்கள்' என்கிறார் ராகுல்.
Wayanad(Kerala): நாட்டின் பல்வேறு இடங்களில் தனக்கு எதிராக பாஜகவால் தொடரப்பட்ட வழக்குகளால், தான் அடிபணிந்து போய்விட மாட்டேன் என்றும், அந்த வழக்குகள் தனக்கு பதக்கங்களைப் போன்றது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
'15 முதல் 16 வழக்குகள் எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளன. நீங்கள் போர் வீரரை பார்த்தீர்கள் என்றால், அவர் ஏராளமான பதக்கங்களை தனது நெஞ்சில் வாங்கியிருப்பார். ஒவ்வொரு வழக்கும் எனக்கு பதக்கத்தை போன்றதாகும்' என்று ராகுல் காந்தி வயநாடு மாவட்டம் வன்யம்பலத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
'வழக்குகள் அதிகரிக்க அதிகரிக்க எனக்கு மகழ்ச்சிதான்' என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அவற்றை கொள்கை ரீதியாக எதிர்த்து வருவதாக கூறினார். இந்தியா வெறுப்புணர்வை விரும்புவதில்லை என்ற தான் நம்புவதாக கூறிய ராகுல் காந்தி, எத்தனை முறை பாஜக வெறுப்புணர்வை தூண்ட முயன்றாலும் தோல்வியில்தான் முடியும் என்றார்.
பெண்கள் மீதான மரியாதை, அனைத்து மக்களையும் உள்ளடக்கியது, சமூகங்கள், வேறுபட்ட கொள்கைகள்தான் இந்தியாவின் வலிமை.
''ஒவ்வொரு முறையும் நீங்கள் எனக்கு எதிராக வழக்கை தொடர்கிறீர்கள். ஆனால் நான் அன்பின் மொழியாகத்தான் பேசுவேன். எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன்'' என்று தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசினார்.
'எப்போதெல்லாம் எனக்கு எதிராக வழக்குத் தொடர்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் என் நெஞ்சில் பதக்கத்தை குத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்த பதக்கத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு' என்றார் ராகுல்.
கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, வெள்ளத்தில் ஏராளமானோர் தங்களை வீடுகள், உயிர் என அனைத்தையும் இழந்தனர். இருப்பினும், இயற்கையின் நேர்மறையான போக்கு மக்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று கூறினார்.
இன்னும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற வேண்டியுள்ளது என்று ராகுல் குறிப்பிட்டார்.
மாநில அரசுக்கு தேவையான நிவாரண உதவி மற்றும் மீட்பு பணிக்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், தனது நடவடிக்கை தொடரும் என்றும் பேசினார்.
மனிதருக்கு மனிதர் உதவு கலாசாரம்தான் தற்போதைய தேவையாக உள்ளது என்றும், மற்ற நாடுகளைப் போன்ற ஆடம்பரம் தேவையில்லை என்றும் ராகுல் கூறினார்.