This Article is From Apr 04, 2019

வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

கேரளா, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, பிரியங்கா காந்தி உடனிருந்தார். 

Wayanad:

கேரளா, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, பிரியங்கா காந்தி உடனிருந்தார். 

வயநாடுவில் இன்று காலை வந்தடைந்த ராகுலுக்கு, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

ராகுல் காந்தி இந்த முறையும் உத்தர பிரதேச அமேதி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அதே நேரத்தில் ராகுல், வயநாடுவை இரண்டாவது தொகுதியாக தேர்ந்தெடுத்து அங்கேயும் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்னர் சொல்லப்பட்டது. 

நேற்று ராகுல் கோழிக்கோடுவுக்கு வந்தடைந்தார். அங்கும் அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரியங்கா காந்தி, ராகுல் வருவதற்கு முன்னரே கோழிக்கோடுவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராகுல், வயநாடுவை தனது இரண்டாவது தொகுதியைத் தேர்ந்தெடுத்தது குறித்து கறாராக விமர்சனம் செய்துள்ளது பாஜக. அக்கட்சி, ‘அமேதியில் இருந்து ராகுல் ஓடுகிறார். ஏனென்றால், இந்தத் தொகுதியில், தான் வெற்றி பெறுவோமா என்பது குறித்து ராகுலுக்கு சந்தேகம் உள்ளது' என்று கூறியுள்ளது. அமேதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக ராகுல் களம் காண்கிறார். 

அதே நேரத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் தெரிவிக்கையில், ‘மோடி, தென் இந்தியாவுக்கு எதிராக நடந்து கொள்கிறார் என்கின்ற உணர்வு இப்பகுதி மக்களிடம் உள்ளது. அதை எங்கள் கட்சி மாற்றும். நான் உங்களோடு துணை நிற்கிறேன் என்று தென்னிந்தியர்களுக்கு வயநாடுவில் போட்டியிடுவதன் மூலம் தெரிவிக்க விரும்புகின்றேன்' என்றுள்ளார். 

மகாராஷ்டிராவில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டத்தில் இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘இந்துக்களை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியுள்ளார். எனவே, இந்துக்கள் அவருக்குத் தக்கப்பாடம் புகட்டுவர் என்பது தெரியும். அதனால்தான், அதிகம் சிறுபான்மையினர் இருக்கும் தொகுதியை ராகுல் தேர்ந்தெடுத்துள்ளார்' என்று பேசினார். 

வயநாடுவில், பழங்குடி மக்களின் விகிதம் மிக அதிகம். வயநாடுவில் உள்ள 18 சதவிகிதம் மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வயநாடுவின் எல்லையில், கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி, வயநாடுவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்குத். அமேதியில் மே 6 ஆம் தேதி தேர்தல் நடக்கும். மே 23 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்படும். 
 

.