This Article is From Mar 21, 2019

‘மோடியின் பேரன் ராகுல் காந்தி’ : மீண்டும் உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மக்களவை தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான பாமகவுக்கு அளித்துள்ளது. அங்கு நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் உளறிக்கொட்டியுள்ளார்.

‘மோடியின் பேரன் ராகுல் காந்தி’ : மீண்டும் உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பொதுக்கூட்டங்களில் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து தடுமாறி பேசி வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • பொது இடங்களில் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையாக பேசி வருகிறார்
  • கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் என்று பேசியிருந்தார்
  • மோடி எங்கள் டாடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் பேசினார்

மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மக்களவை தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான பாமகவுக்கு அளித்துள்ளது. அங்கு நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் வியூகம் குறித்து பேச ஆரம்பித்தார். அவர் பேசும்போது, ‘'இந்தியாவில் யார் பிரதமராக வரவேண்டும் என்பற்காக நடக்கும் தேர்தல் யுத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒருபக்கம் போட்டியிடுகிறார்கள். அவரது பேரனாக இருக்கின்ற ராகுல் காந்தி ஒருபக்கம் போட்டியிடுகிறார்கள்'' என்று பேசினார்.

இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி என்பதற்கு பதிலாக, மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பலமுறை பொது இடங்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறித் தள்ளியுள்ளார். கடந்த அக்டோபரில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக பேசிய சீனிவாசன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம் திருவாரூர் கூட்டத்தில் பேசிய சீனிவாசன் மோடி அகில உலகத்திற்கெல்லாம் தலைவர் என்று பேசினார். மேலும் அதிர்ச்சியாக, மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாக பேசி சர்ச்சையை உண்டாக்கினார்.

சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி எங்களுக்கு டாடி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.