கடந்த 15 ஆண்டுகளாக ம.பி-யில் பாஜக தான் ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
New Delhi: மத்திய பிரதேசத்தில் இன்னும் ஒரு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுகான், ‘ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்வேன்' என்று கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடந்த கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், சிவராஜ் சிங் சவுகானின் பெயரைக் குறிப்பிடாமல், ‘அவர் பனாமா பேப்பர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் வியாபம் ஊழலிலும் ஈடுபட்டுள்ளார்' என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து முதல்வர் சவுகான், ‘எனக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் நீங்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளீர்கள் ராகுல் காந்தி.
நீங்கள் கூறிய இந்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நான் அவதூறு வழக்கு தொடர உள்ளேன். சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக தரப்பு, ‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராகுல் காந்தி குற்றம் செய்துள்ளார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எங்கள் கட்சியின் தலைமை முடிவு செய்யும்' என்று கூறியுள்ளது.
வரும் நவம்பர் 28 ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ம.பி-யில் பாஜக தான் ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.