This Article is From Feb 23, 2019

பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான்! - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

தமிழகத்தை பொறுத்தவரை தங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான்! - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவானது கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாடு முழுவதும் இந்த விழா குறித்து அனைவரின் பார்வையும் வந்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தை பொறுத்தவரை தங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வு முக்கியமான தருணம் என்றும், மாற்றுக் கட்சியை சேர்ந்த 20,000 பேர் திமுகவில் இணைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 

.