বাংলায় পড়ুন Read in English
This Article is From May 25, 2019

தேர்தல் தோல்விக்குப் பின்னர் நடக்கவுள்ள காங். கூட்டம்; ராகுல் ராஜினாமா செய்ய வாய்ப்பு!

2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, மொத்தமாக 44 இடங்களில் வெற்றி பெற்றது.

Advertisement
இந்தியா Edited by

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மொத்தமாக 52 இடங்களைக் கைப்பற்றியது. 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

New Delhi:

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து அக்கட்சி சார்பில் இன்று டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. 

காங்கிரஸ் செயற்குழு கமிட்டியைச் சேர்ந்த 52 பேரும் இன்று சந்திக்க உள்ளனர். அதில் பிரியங்கா காந்தி வத்ரா, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

ராகுல் காந்தி இந்த முறை, ‘சவுகிதார் திருடன்' என்று கோஷத்தை முன் வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். ஆனால், அவரின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. உத்தர பிரதேச அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, ஸ்மிருதி இராணியிடம் தோல்விகண்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பேசிய ராகுல், “கட்சியின் தோல்விக்கு நானே 100 சதவிகிதம் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்றார். அப்போது, “நீங்கள் பதவியை ராஜினாமா செய்வீர்களா?” எனக் கேட்டதற்கு, “அது எனக்கும் செயற்குழு கமிட்டிக்கும் இடையில் இருக்கட்டும்” என்று முடித்துக் கொண்டார். எனவே, அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை. 

சில மாதங்களுக்கு முன்னர்தான் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், கிழக்கு உத்தர பிரதேச பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். கிழக்கு உ.பி-யில்தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதி உள்ளது. அவர் இந்த முறை சுமார் 4.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

Advertisement

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மொத்தமாக 52 இடங்களைக் கைப்பற்றியது. 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, மொத்தமாக 44 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கண்ட அந்த வரலாற்றுத் தோல்வியைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினர். நேரு-காந்தி குடும்பத்துக்கு அதிக மரியாதை கொடுக்கும் காங்கிரஸ், அவர்களின் பேச்சை கேட்க மறுத்துவிட்டது. 

Advertisement

ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ராகுலுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாக சொல்லப்படுகிறது. 

Advertisement