காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, 370வது சட்டப் பிரிவு ரத்து குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
ஹைலைட்ஸ்
- ராகுல் காந்தி, ஜம்மூ காஷ்மீர் விஷயத்தில் மவுனம் காத்து வந்தார்
- இன்று ராகுல், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசித்தார்
- பல காங்கிரஸ் நிர்வாகிகள், 370 ரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்
New Delhi: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சிறப்பு சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு ஒரு நாள் கடந்துள்ள நிலையில், அது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
“தன்னிச்சையாக ஜம்மூ காஷ்மீர் குறித்து எடுத்துள்ள முடிவால் தேசிய ஒற்றுமை மேம்படவில்லை. அங்கிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறையில் அடைத்ததன் மூலமும் சட்ட சாசனத்தை மீறியதன் மூலமும் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. தேசம் என்பது மக்களால் ஆனது. நிலங்களால் அல்ல. அதிகாரம் இப்படி பயன்படுத்தப்பட்டது தேசிய பாதுகாப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பொங்கியுள்ளார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, 370வது சட்டப் பிரிவு ரத்து குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இதைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் எம்.பி-க்கள் ராகுல் மற்றும் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்துதான் ராகுல், தனது கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரதிநிதகள் எதிர்வினையாற்றினார்கள். நேற்று இது குறித்து எந்த வித கருத்தையும் சொல்லாமல் ராகுல் அமைதியாகவே இருந்தார்.
ராஜ்யசபாவிற்குள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மத்திய அரசின் நடவடிக்கையை, “இது ஜனநாயகப் படுகொலை” என்று விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில் அக்கட்சியின் ஜனார்த்தன் திவேதி, தீபேந்திர ஹூடா ஆகியோர் அரசுக்கு ஆதரவான கருத்துகளை கூறினர்.
இன்று காலை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசிய சோனியா காந்தி, “நாங்கள் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான நடவடிக்கையை எதிர்க்கவே செய்வோம். ஜம்மூ காஷ்மீர் மக்களின் கருத்தை அறியாமலும், அம்மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாலேயே இந்த எதிர்ப்பு” என்று விளக்கம் கொடுத்தாராம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்குப் பொறுப்பேற்று, ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவியை ராஜினாமா செய்து இரு மாதங்கள் கடந்த பின்னரும், அடுத்த தலைவரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது காங்கிரஸ். இந்நிலையில்தான் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்னும் சில நாட்களில் கூட இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.