Congress News - நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி, தான் வகித்த தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
New Delhi: காங்கிரஸ் (Congress) கட்சி, பொருளாதார மந்தநிலையை (Economic Slowdown) முன்வைத்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்துக்குத் தயாராகி வரும் நேரத்தில், கட்சியின் முக்கியப் புள்ளியான ராகுல் காந்தி (Rahul Gandhi), வெளிநாடு பறந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அவர் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றுள்ளதாகவும், ஒரு வாரத்தில் தாயகம் திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “மன அமைதி பெற ராகுல் காந்தி, அவ்வப்போது வெளிநாடு பயணம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அப்படிபட்ட ஒன்றில்தான் தற்போதும் அவர் பயணப்பட்டுள்ளார்,” என விளக்கம் அளித்துள்ளார்.
வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, காங்கிரஸ் 35 பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைக்க திட்டம் போட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலையைச் சுட்டிக்காட்டும் வகையில் நவம்பர் 5 முதல் 15 ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுக்க உள்ளது காங்கிரஸ்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள், செய்தியாளர்களிடம் பேசுவார்கள். இறுதியாக டெல்லியில் நடைபெற உள்ள இறுதி செய்தியாளர்கள் சந்திப்பில், காங்கிரஸுடன் தோழமையுடன் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு, நிருபர்களிடம் பேசுவார்கள் எனத் தெரிகிறது.
நாட்டின் தலைநகரங்கள் மற்றும் முக்கிய மாவட்டங்களில் காங்கிரஸ், போராட்டங்களை அரங்கேற்ற உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் ராகுல், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரமும் ராகுல், இதைப் போன்ற ஒரு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போது ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல்களுக்கான பிரசாரங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டிலிருந்து வந்த ராகுல், சில பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி, தான் வகித்த தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். பல காங்கிரஸ் முக்கியப் புள்ளிகள், ராகுல் முடிவுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோதும், தனது முடிவில் அவர் ஸ்திரமாக இருந்தார். தொடர்ந்து, சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.