பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கு தனி குணாதிசியம் உண்டு என ராகுல் கூறினார். (File Photo)
New Delhi: நரேந்திர மோடி ஒரு பிரதமரைப் போல நடந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்றைய தினம், பிரதமர் மோடி 'டியூப் லைட்' என விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஒரு பிரதமருக்கு சிறப்பு அந்தஸ்து உண்டு. பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கு தனி குணாதிசியம் மற்றும் பண்பு உள்ளது. ஆனால் நமது பிரதமருக்கு இந்த விஷயங்கள் இல்லை. அவர் பிரதமரைப் போல நடந்து கொள்வதில்லை.
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது, டெல்லி பிரச்சாரத்தின்போது, வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் பிரதமர் மோடியை கம்பால் அடிப்பார்கள் என்று, ராகுல் காந்தி பேசியிருந்ததை மறைமுகமாக சாடினார்.
அப்போது ராகுல் காந்தி எழுந்து பேச முற்பட்டபோது பாஜக எம்பி.க்கள் குரல் கொடுத்ததால் அவர் அமர்ந்துவிட்டார். இதைத்தொடர்ந்து, பேசிய பிரதமர் மோடி, நான் 30 முதல் 40 நிமிடங்களாக இப்போது பேசி உள்ளேன். ஆனால் இப்போது தான் கரன்ட் வந்துள்ளது. சில டியூப்லைட்கள் இப்படி தான் வேலை செய்கின்றன என்றார்.
இந்நிலையில், மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் ராகுல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க எழுந்த ஹர்ஷவர்தன், இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் பிரதமர் மோடி குறித்து ராகுல் கூறிய கருத்து பற்றி பேச விரும்புகிறேன். அவரின் மோசமான, ஏற்க முடியாத வார்த்தையை கண்டிக்க வார்த்தைகள் இல்லை என்றார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை பேசவிடாமல் எதிர்த்து கோஷமிட்டனர். இதனால், இருதரப்புக்கும் ஏற்பட்ட அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய ராகுல், வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாதது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப தாம் விரும்பியதாகவும் தான் பேசினால் பாஜகவுக்கு பிடிக்காது என்பதால் தன்னையும், கட்சியினரையும் பேச அனுமதிக்கவில்லை என்றும் ராகுல் தெரிவித்தார்.