பேரணியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளர்களை மீட்க ராகுல் உதவினார்.
Wayanad: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து ராகுலும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், வாக்கு சேகரித்தப்படி பேரணியாக சென்றனர். இந்த பேரணியின் போது, அளவுக்கு அதிமான கூட்டத்தில் எதிர்பாராத விதமாக தடுப்பு ஒன்று திடீரென விழுந்ததில் பேரணி குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, காயமடைந்த பத்திரிகையாளர்களை ஆம்புலான்ஸில் ஏற்றிச்செல்ல ராகுலும், பிரியங்காவும் உதவி செய்தனர். வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி நேற்று இரவே கேரளா வந்தார். கோழிக்கோட்டில் தங்கிய அவர் இன்று பகல் 11.30 மணி அளவில், ஹெலிகாப்டர் மூலம் வயநாடு கலெக்டர் அலுவலகம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராகுலையும், பிரியங்காவையும் காண இன்று காலை முதலே வயநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்சி பாகுபாடின்றி ஏராளமான மக்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டனர். வேட்புமனு தாக்கலை தொடர்ந்து நடந்த பேரணியில் அவர்கள் இவருவரையும் மக்கள் உற்சாகமாக கை அசைத்து வரவேற்றனர்.
வயநாட்டின் அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கொடிகளும், அவற்றை ஏந்திச்சென்ற தொண்டர்களும் பேரணியாக சென்றனர். அப்போது, அலை மோதிய கூட்டத்தில், தடுப்பு ஒன்று திடீரென விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ராகுல் காந்தியின் வருகையை பதிவு செய்ய வந்திருந்த 3 செய்தியாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை எதிர்க்கவே மேற்கு மாநிலம் மற்றும் தென்மாநிலத்தில் போட்டியிடுகிறேன் என்று கூறிய அவர், கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
வயநாடு தொகுதியில் ஏப்.23ஆம் தேதியும், அமோதி தொகுதியில் மே.6ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே.23ஆம் தேதி நடைபெறுகிறது.