Thiruvananthapuram: திருவணந்தபுரம்: கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் பெரும்பான்மையான இடங்களில் இருந்து வடியத் தொடங்கியதை அடுத்து, வீடுகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை காண காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள ராகுல், வெள்ளம் பாதித்த திருவணந்தப்புரம், செங்கனூர், அங்காமலி, ஆலப்புழா ஆகிய இடங்களை இன்று பார்வையிட்டார்.
ஆலப்புழா பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்ற ராகுல் காந்தி, மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களை கெளரவித்தார். அதனை தொடர்ந்து, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாறிய மீனவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 3,000 மீனவர்கள் 70,000 மக்களை காப்பாற்றியுள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கான புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், செங்கனூரில் உள்ள நிவாரண முகாமிற்கு சென்ற ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த சில வாரங்களாக, கேரள வெள்ளம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து பதிவுகள் இட்டு வந்தார். குறிப்பாக அவர், பிரதமர் மோடியிடம் கேரள வெள்ளம் ஒரு தேசிய பேரிடர் என்று அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.