This Article is From Jun 15, 2020

ஐன்ஸ்டீனை மேற்கோள் காட்டி மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல்!

ராகுல், ‘தவறான பந்தயத்தில் வெற்றி பெற இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆணவம் மற்றும் போதிய திறனற்ற அரசால் இப்படியொரு விஷயம் நடந்துள்ளது’ என்றார். 

ஐன்ஸ்டீனை மேற்கோள் காட்டி மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல்!

மத்திய அரசு தரப்பு, லாக்டவுன் போடப்பட்டதனால்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மட்டுப்படுத்தப்பட்டது என்று தொடர்ந்து கூறி வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார் ராகுல்
  • பிப்ரவரி மாதமே மத்தி அரசுக்கு, கொரோனா குறித்து எச்சரித்தார் ராகுல்
  • கொரோனா விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் போதாது: ராகுல்
New Delhi:

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசை, 20 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற அறிவியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை மேற்கோள் காட்டி விமர்சித்துள்ளார். 

“இந்த லாக்டவுன் ஒரேயொரு விஷயத்தை உறுதிபட தெரிவிக்கிறது:

‘அறியாமையைவிட மிக ஆபத்தானது ஆணவம் என்கிற ஒரேயொரு விஷயம்தான்'- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்” என்று கருத்து தெரிவித்து 7 நொடிகள் கொண்ட ஒரு சிறிய வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி. அந்த வீடியோவில் எப்படி லாக்டவுன் சமயங்களில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்தது என்றும், அதே நேரத்தில் எப்படி இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக குறைந்தது என்றும் விவரிக்கப்படுகிறது. 

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 3.32 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று 11,000-க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 50 சதவீதம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க போடப்பட்ட லாக்டவுன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. மத்திய அரசு, வைரஸ் தொற்றை எதிர்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கறார் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். 

லாக்டவுன் காலக்கட்டத்தில் ராகுல், பல்வேறு துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு தொடர்ந்து கொரோனா தொற்று குறித்தும் நாட்டு நடப்பு குறித்தும் உரையாடி வருகிறார். 

சமீபத்தில் பஜாஜ் வாகன உற்பத்தி நிறுவனத்தின் எம்டி ராஜிவ் பஜாஜுடனான உரையாடினார் ராகுல். அப்போது ராஜிவ் பஜாஜ், “மிக கறாரான முழு முடக்க நடவடிக்கையை அமல்படுத்த முயற்சித்தோம். அப்படியும் அதில் குறைபாடுகள் இருந்தன. இதனால் இரு விதத்திலும் நமக்கு பாதிப்பு ஏற்பட்டன. ஒரு பக்கம், முறையான கட்டுப்பாடுகள் இல்லாத லாக்டவுன் மூலம் வைரஸ் பரவுவது முற்றிலும் நிற்கவில்லை. எப்போது லாக்டவுன் எடுக்கப்பட்டாலும் தீவிரமாக பரவ வழிவகை செய்துவிட்டோம். அந்தப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. அதேபோல இன்னொரு பக்கம், பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வைரஸ் தொற்றை குறைப்பதற்கு பதில் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிட்டோம்,” என்றார். 

கடந்த வாரம் ராகுல், ‘தவறான பந்தயத்தில் வெற்றி பெற இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆணவம் மற்றும் போதிய திறனற்ற அரசால் இப்படியொரு விஷயம் நடந்துள்ளது' என்றார். 

அதே நேரத்தில் மத்திய அரசு தரப்பு, லாக்டவுன் போடப்பட்டதனால்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மட்டுப்படுத்தப்பட்டது என்று தொடர்ந்து கூறி வருகிறது. 

.