மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுலே பொறுப்பு
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் காந்தியே பொறுப்பு என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்டம் மட்டுமே மீதுமுள்ள நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி, கேரளாவில் இடதுசாரிகள், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், டெல்லியில் ஆம் ஆத்மி என அனைத்து கட்சிகளுக்கும் ராகுல் தீங்கு செய்துவிட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக போட்டியிடுவது போல் தெரியவில்லை, எதிர்கட்சிகளுக்கு எதிராக போட்டியிடுவது போல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்திலும் தோல்வியுற்ற பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு எதையும் வழங்கவில்லை என்றும் அதனால் தான் அவர் போலி தேசியவாதம் பேசி வருகிறார் என்றும் கெஜ்ரிவால் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் நாட்டிற்காக எந்த பணியும் செய்யாத நிலையில், பாதுகாப்பு படைகளை வாக்குகள் பெற பயன்படுத்தி வருகிறார். அவரது போலி தேசியவாதம் என்பது நாட்டிற்கு பெரும் ஆபத்து.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இருநாட்டிற்கு இடையே அமைதி நிலவும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்தை குறிப்பிட்ட கெஜ்ரிவால், எதற்காக எதிரி நாடு மோடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு போர் நடக்கும் சூழல் இருந்து வந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் எதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்? என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கடினமாக உள்ளது.
தொடர்ந்து, தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு படையை குறிப்பிட்டு வரும் மோடியை கடுமையாக விமர்சித்த அவர், கடைசி 70 வருடங்களில், எந்த பிரதமரும் இப்படி பாதுகாப்பு படையை அவமதித்தது இல்லை என்று கூறியுள்ளார்.