This Article is From Apr 15, 2019

''டெல்லியில் ஆம் ஆத்மிக்கு 4 சீட்டுகள் தர தயார்!'' - முதன் முறையாக கூட்டணியை பேசிய ராகுல்!!

இதுவரையில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி குறித்து எதுவுமே பேசாத ராகுல் காந்தி முதன் முறையாக அக்கட்சிக்கு 4 சீட்டுகள் தருவதாக தெரிவித்திருக்கிறார்.

''டெல்லியில் ஆம் ஆத்மிக்கு 4 சீட்டுகள் தர தயார்!''  - முதன் முறையாக கூட்டணியை பேசிய ராகுல்!!

ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையிலான கூட்டணி அமையாமல் இருப்பதற்கு ஷீலா தீட்சித்தே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

New Delhi:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்கத் தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கூட்டணி குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பான தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைக்கிறது என்றால் அதற்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் இதற்கு உடன்படவில்லை' என்று கூறியுள்ளார். 
 


டெல்லியை பொறுத்தளவில் அங்கு மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்பதாகத்தான் இருந்தது.

இங்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ஆம் ஆத்மி ஆர்வம் காட்டினாலும், ராகுல் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்த நிலையில்தான் முதன்முறையாக ராகுல் காந்தி கூட்டணி குறித்து பேசியிருக்கிறார்.

முன்னதாக கடந்த ஞாயிறன்று கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், 'நாடு மிகவும் ஆபத்தான சூழலில் இருக்கிறது. நாட்டை அமித் ஷாவிடமிருந்தும், மோடியிடம் இருந்தும் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.' என்று கூறியிருந்தார்.

பஞ்சாபை பொறுத்தளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 எம்.பி.க்கள், 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அரியானாவை பொறுத்தளவில் காங்கிரசுக்கு ஒரேயொரு எம்.பி. மட்டும் உள்ளார். இங்கும் ஆம் ஆத்மிக்கு ஒரு சீட் கூட ஒதுக்குவதற்கு காங்கிரஸ் விரும்பவில்லை.

.