Coronavirus: தற்போது மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனை என்பது மிகவும் குறைவானது
ஹைலைட்ஸ்
- ஊரடங்கால் கொரோனாவை தற்காலிகமாக தடுக்கலாம், அழிக்க முடியாது
- தற்சமயம் மேற்கொள்ளப்படும் சோதனை அளவு என்பதும் மிகவும் குறைவானது
- இரண்டு மண்டலங்கள் மட்டுமே இருக்க வேண்டும்
New Delhi: ஊரடங்கு உத்தரவால் கொரோனா வைரஸை தற்காலிகமாக தடுக்கலாம், ஆனால், எந்த வகையிலும் அதனை அழிக்க முடியாது, என முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு என்பது தீர்வாகாது, என்றும் உடனடியாக அரசு தீவிரமாகவும், அதிகளவிலும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ செயலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது, இந்தியாவில் ஹாட்ஸ்பாட் மற்றும் ஹாட்ஸ்பாட் அல்லாத இரண்டு மண்டலங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைந்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் எந்த வகையிலும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க முடியாது, அதன் மூலம் வைரஸ் பரவலை தற்காலிகமாக தடுத்து நிறுத்த மட்டுமே முடியும். இதற்கு ஒரே தீர்வு 'தீவிரமாக சோதனையை அதிகரிப்பது' என்பது மட்டுமே, சோதனையை அதிகப்படுத்தி, வைரஸை துரத்துவது என்பது மட்டுமே அரசுக்கு நான் வழங்கும் ஆலோசனையாகும்.
தற்போது, கொரோனா வைரஸை துரத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் முறையின் மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த சரியான அளவீட்டை ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது.
தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை அளவு என்பதும் மிகவும் குறைவானதாக உள்ளது. சோதனையை அதிகரிக்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை.
மேலும், பொதுமக்கள் குறைந்தபட்ச நிதி பலனை பெறும் வகையிலான திட்டத்தை அரசு தயாரிக்க வேண்டும். நீங்கள் அதனை நியாய் திட்டம் என்று அழைக்க வேண்டியதில்லை, உணவு பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனை நீங்கள் விமர்சனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நான் நடந்து முடிந்ததை பற்றி பேச விரும்பவில்லை. நாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமே தவிர மாறி மாறி குறைக்கூறி கொண்டு இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக நாம் நம்மிடம் இருக்கும் வளங்களை கவனமாக பயன்படுத்துவோம், மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் தேவையான நிதியை அளிப்போம்.
உயிர்களை பாதுகாத்து வரும் இந்த நேரத்தில், நமது பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிந்து விடக்கூடாது என்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.