ஜோதிராதித்ய சிந்திய இன்று பாஜகவில் இணைவார் என்று தெரிகிறது.
ஹைலைட்ஸ்
- காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதில் பிரதமர் பிஸியாக இருக்கிறார்
- கச்சா எண்ணெய் விலை சரிவை பிரதமர் கவனிக்க தவறிவிட்டார்.
- ஜோதிராதித்ய சிந்திய இன்று பாஜகவில் இணைவதாக தகவல்
New Delhi: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் ஆட்சியைச் சீர்குலைப்பதிலே பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் என ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து அவர் கூறியதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியைச் சீர்குலைப்பதில் நீங்கள் பிஸியாக இருக்கும் நேரத்தில், கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் சரிவடைந்துள்ளதை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நேரத்தில் இந்திய மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல் விலையை ரூ.60க்கும் கீழ் குறைத்து அறிவித்தால், மந்தமடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவதற்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸில் முக்கிய தலைவரும், நான்குமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா திடீரென காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்தது பெரும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்கக் காங்கிரஸ் திணறி வருகிறது.
காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரான சிந்தியா, கட்சியில் மூத்த தலைவர்களுடன் நீண்ட காலமாக அதிருப்தியிலிருந்ததாக தெரிகிறது. மேலும், கட்சி விவகாரங்களில் அவர் ஓரங்கட்டப்பட்டதன் விரக்தியின் வெளிப்பாடாகவே அவரது ராஜினாமாவைப் பலர் பார்க்கின்றனர்.
தொடர்ந்து, ஜோதிராதித்ய சிந்திய இன்று பாஜகவில் இணைவார் என்று தெரிகிறது. அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரஷ்ய நாட்டுடன் ஒரு விலை போரைத் துவங்கும் வகையில், சவூதி அரேபியா கச்சா எண்ணெய் விற்பனை விலையை அண்மையில் மிகவும் குறைத்து அறிவித்துள்ளது. இதனால், கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.