This Article is From Mar 07, 2019

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விசாரணை செய்ய வேண்டும்! - ராகுல் காந்தி

ரஃபேல் ஆதாரங்கள் உண்மை என மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய போதிய ஆதாரம் உள்ளது

New Delhi:

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே நேற்று, பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய போதிய ஆதாரம் உள்ளது என்று கூறிய ராகுல் காந்தி இன்று அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் வெளியானது குறித்து நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, ரஃபேல் கொள்முதல் தொடர்பான ஆதாரங்கள் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டன என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார். அனில் அம்பானி பலன் அடைய வேண்டும் என்பதற்காகவே கொள்முதல் தாமதமாதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு பாதுகாப்புத்துறை அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டு என மத்திய அரசு கூறியிருக்கிறது. அப்படியென்றால் ஊடகங்களில் வெளியான ஆவணங்கள் உண்மை என மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் விசாரணை நடத்த அரசு ஏன் தயங்குகிறது? ரபேல் ஆவணங்கள் பிரதமரின் ஊழலை அம்பலமாக்கிவிடும். பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இருந்த பல ஆவணங்கள் மாயமாகி உள்ளன. ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ஏன் விசாரணை நடத்தக் கூடாது.

இறுதி பேச்சு வார்த்தையை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆவணங்கள் மாயமானதாக நீங்களே ஒப்புக் கொண்டுள்ளீர்கள், இதன் மூலம் அந்த ஆவணங்கள் உண்மையானவை என்பது தெரிகிறது.

பிரதமர் மோடி குற்றம் செய்யவில்லையென்றால், ஏன் விசாரணை நடைபெற ஒத்துழைக்க மறுக்கிறார். அவர் குற்றம் செய்யவில்லையென்றால் ஏன் அஞ்ச வேண்டும். ரஃபேல் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக ஊடகங்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், 30 ஆயிரம் கோடி ஊழலில் தொடர்புடைய நபர் மீது எந்த விசாரணையும் இல்லை என்று அவர் கூறினார்.


 

.