New Delhi: சில நாட்களுக்கு முன்னர் ஒரு உருது மொழியில் வெளி வரும் செய்தித்தாள், ‘ராகுல் காந்தி காங்கிரஸ் முஸ்லீம்களுக்கான கட்சி’ என்று கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டது. இது பெரும் விவாதப் பொருளான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தரப்பு வாதத்தைத் தெரிவித்துள்ளார்.
உருது செய்தித்தாளில் வந்த செய்தியை, ராகுல் பேசிய கூட்டத்தில் நேரில் சென்றிருந்த பலர் மறுத்தனர். ஆனால் அந்த விஷயத்தை விடாமல் மோடி, ‘ஒரு உருது செய்தித்தாளில் ‘காங்கிரஸ் முஸ்லீம்களுக்கான கட்சி’ என்று ராகுல் காந்தி பேசியுள்ளதாக படித்தேன். இது எனக்கு ஒரு விதத்திலும் அதிர்ச்சியளிப்பாத இல்லை’ என்று உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதில் வாதம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தி தற்போது அது குறித்து பேசியுள்ளார். ‘ஒரு வரிசையில் நிற்கும் கடைசி நபருடன் நான் நிற்பேன். சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட நபருக்கு நான் தொல் கொடுப்பேன். அந்த நபரின் மதமோ சாதியோ கொள்கையோ எனக்கு முக்கியமில்லை. அவருக்கு இருக்கும் பயத்தையும் வெறுப்பையும் நான் களையச் செய்வேன். அனைவரையும் நான் விரும்புகிறேன். நான் ஒரு காங்கிரஸவாதி’ என்று ட்விட்டர் மூலம் பாஜக-வினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராகுல்.
ராகுல் கூறியதாக உருது நாளிதழில் வெளியான செய்திக்கு, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாஜக-வின் பல முக்கியப் புள்ளிகள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.