Republic Day Parade 2019: ராகுல் அமர்ந்திருந்த இருக்கைக்கு 3 இடங்கள் தள்ளி பாஜக தலைவர் அமித்ஷா உட்கார்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
New Delhi: நாட்டின் 70வது குடியரசு தினமான இன்று, டெல்லியின் ராஜ்பாத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையிலும் ராணுவத்தின் பலத்தை எடுத்துக் காட்டும் வகையிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் வரிசை இருக்கையில் அமர்ந்து பரேடை கண்டுகளித்தார். அவருக்குப் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் உட்கார்ந்திருந்தார். இருவரும் நெருக்கமாக பேசிக் கொண்டது தேசிய அரசியல் வட்டாரத்தின் பேசு பொருளாக மாறியுள்ளது. ராகுல் அமர்ந்திருந்த இருக்கைக்கு 3 இடங்கள் தள்ளி பாஜக தலைவர் அமித்ஷா உட்கார்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது ராகுல் காந்திக்கு, 4வது வரிசையில் இடமளிக்கப்பட்டது. இது ராகுலை அவமரியாதை செய்தது ஆகும் என்று கூறி காங்கிரஸ் தரப்பினர் பிரச்னை எழுப்பினார்கள். ஆனால் ராகுலோ, ‘நான் எங்கு அமர்ந்திருந்தேன் என்பது முக்கியமல்ல. அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்பதுதான் முக்கியம்' என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் ராகுலின் முதல் வரிசை இடமும், நிதின் கட்கரியுடனான நெருக்கமும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக கட்கரி, பாஜக-வின் தலைமையை கேள்வியெழுப்பும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக கடந்த மாதம் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உரைகளில் இருக்கும் கவர்ச்சித் தன்மை குறித்து வியந்து பேசினார். அதேபோல இன்னொரு நிகழ்ச்சியில் நேருவின் மகளும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியைப் புகழ்ந்து பேசினார். பெண்கள் முன்னேற்றமடைய இந்திரா காந்தியை முன்னுதாரணமாக எடுத்து செயல்படலாம் என்று கட்கரி கூறினார்.
இப்படி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குறித்து பேசியதை அடுத்து பாஜக-விலிருக்கும் சிலர், ‘கட்கரி தொடர்ந்து காங்கிரஸுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் அடுத்தமுறை ரஃபேல் குறித்து ராகுல் சொல்லும் கருத்துகளை வழிமொழிவார் போலிருக்கிறது' என்று சலசலத்தனர்.
ராகுல் காந்தியின் தாயாரான சோனியா காந்தி, இன்றைய குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகவுடா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.