இது குறித்து முதன்முதலில் பேச ஆரம்பித்தது ராகுல் காந்திதான்.
New Delhi: இந்தியாவில் பாஜக உட்பட வலதுசாரிகள், ஃபேஸ்புக் தளத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் கருத்திட்ட பதிவுகளை, அந்நிறுவனம் வேண்டுமென்றே நீக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் ஊடக நிறுவனம், செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைமையில் ஃபேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்கிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தைப் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “இந்தியர்கள் அனைவரும் இது குறித்து கேள்வியெழுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி, தன் ட்வீட் பதிவில், “மிகவும் கஷ்டங்களுக்குப் பின்னர் நாம் பெற்ற ஜனநாயகத்தை ஒரு பக்க சார்பு, போலி செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சின் மூலம் இழக்க கூடாது.
போலி மற்றும் வெறுப்புப் பேச்சுகளை ஃபேஸ்புக் வலிந்து அனுமதித்தது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து அனைத்து இந்தியர்களும் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எழுதிய கடிதத்தில், ‘ஃபேஸ்புக் நிறுவனம், இந்த வெறுப்புப் பிரசாரத்தில் விருப்பப்பட்டு இணைந்திருக்கலாம். இதன் மூலம் காங்கிரஸின் தலைவர்கள் உயிரைத் தியாகம் செய்து வாங்கித் தந்த உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இப்போது கூட, தங்கள் தவறை ஃபேஸ்புக் திருத்திக் கொள்ளலாம்.
இந்தப் பிரச்னையை சரி செய்ய ஃபேஸ்புக் தரப்பு, முதலாவதாக ஒரு விசாரணையை நடத்த வேண்டும். ஓன்று அல்லது இரண்டு மாதங்களில் அதை முடித்து, முடிவுகள் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும். அதேபோல 2014 ஆம் ஆண்டு முதல் வெறுப்பைத் தூண்டும் வகையில் அனுமதிக்கப்பட்ட பதிவுகளின் விவரங்களை ஃபேஸ்புக் வெளியிட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான ஃபேஸ்புக் பாலிசி தலைவர், அங்கி தாஸ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும், மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், வெறுப்புப் பேச்சுகளுக்கு அனுமதியளித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வந்ததிலிருந்து காங்கிரஸும் - பாஜகவும் வாதப் போர் நடத்தி வருகின்றன. இது குறித்து முதன்முதலில் பேச ஆரம்பித்தது ராகுல் காந்திதான். அவர், வால் ஸ்ட்ரீன் ஜர்னல் வெளியிட்ட செய்திக் கட்டுரையைப் பகிர்ந்து, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளன. இந்த தளங்கள் மூலம் அவர்கள் வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, வாக்காளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இது குறித்த உண்மையை அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்று வெளியே கொண்டு வந்துள்ளது” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.