This Article is From Dec 17, 2018

ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன்: மு.க.ஸ்டாலின் உறுதி மொழி

ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன், மேடையில் உள்ள மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமராக்க ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Chennai:

ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன், மேடையில் உள்ள மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமராக்க ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கலைஞர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

p1gfagh

சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மெரீனா கடற்கரைக்கு சென்று, அண்ணா நினைவிடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்துப் போய் இருக்கிறேன், காரணம், தமிழர் வாழ்வில் இன்று முக்கியமான நாள். கலைஞர் சிலை திறக்கப்பட்டது, எனது அரசியல் வாழ்விலேயே மிக முக்கியமான நாள். கலைஞர் மறையவில்லை என்ற உணர்வுதான் என் உயிரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ckjn8mrs

பிரதமர் நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நடந்துகொள்வதற்கு பதிலாக தன்னை ஒரு மன்னராக கருதி செயல்பட்டு வருகிறார். தன்னை ஒரு பிரதமராக மட்டும் கருதாமல் தானே ஜனாதிபதியாகவும், தானே சி.பி.ஐ. அமைப்பாகவும், தானே வருமான வரித்துறையாகவும் கருதி செயல்பட்டு வருகிறார். இதனால் தான் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றினைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்.

ஏதாவது ஒரு சாதனையை பாஜக ஆட்சி செய்தது என்று சொல்ல முடியுமா? தமிழகத்தின் நலனுக்கு மத்திய பாஜக அரசு செய்தது என்ன? கஜா புயல் போன்ற பேரிடர் குஜராத்தில், மராட்டியத்தில் ஏற்பட்டிருந்தால் நரேந்திர மோடி சென்றிருப்பார் அல்லவா? ஒரு சேடிஸ்ட் மனப்பான்மையில் உள்ளவர் பிரதமர் நரேந்திர மோடி என்பதை பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். அதனால் தான் மோடியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறோம். வீழ்த்துவதற்கு தான் 21 கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளோம். இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிறது. அதை இந்த நாடு பார்க்கதான் போகிறது.

1980 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் இந்திரா காந்தி பிரதமராக வர வேண்டும் என்று குரல் கொடுத்த போது, நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சியை தருக என்று கலைஞர் கூறினார். 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியாவை குறிப்பிட்டு பேசிய போது, இந்திராவின் மருமகளே வருக. இந்தியாவின் திருமகளே வெல்க என்று முழங்கினார்.

இன்று 2018ஆம் ஆண்டு அதுவும் கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில், அவரின் மகனாக தமிழகத்தில் இருந்து ராகுல் காந்தியின் பெயரை நான் முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக.. நாட்டிற்கு நல்லாட்சி தருக என்று கூறினார்.

 
.