இந்தியாவை போலீஸ் நாடாக மாற்ற மோடி அரசு முயற்சித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
New Delhi: பிரதமர் மோடி ஒரு ''பாதுகாப்பற்ற சர்வாதிகாரி'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் உளவு பார்ப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில்தான் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, வெளிநாடுகள் உடனான நட்புறவை இவற்றை மீறும் வகையில் செய்யப்படும் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாட்டில் உள்ளஅனைத்து கணினிகளையும் கண்காணிக்க என்.ஐ.ஏ., ரா, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், '' இந்தியாவை போலீஸ் கட்டுப்படுத்தும் நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மோடி ஒரு பாதுகாப்பற்ற சர்வாதிகாரி என்பதைத்தான் இந்த நடவடிக்கை நிரூபிக்கப்போகிறது'' என்று கூறியுள்ளார்.
இதற்கு உடனடியாக பாஜக தரப்பிலும் பதிலடி கிடைத்திருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், ''இந்திய வரலாற்றில் பாதுகாப்பற்ற 2 சர்வாதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றனர். ஒருவர் நாட்டில் எமர்ஜன்சியை அறிவித்தவர். மற்றொருவர் சாதாரண குடிமகன்களின் கடிதங்களை படிக்க வேண்டும் என்று விரும்பியவர். அவர்கள் யார் என்று தெரிகிறதா ராகுல் காந்தி?.'' என்று கூறியுள்ளார்.