New Delhi: கேரள மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் ராணுவப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் தொடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த விஷயம் குறித்து பேசி முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேரளா, பெரும் வலியை அனுபவித்து வருகிறது. நான் பிரதமர் மோடியிடம் கேரள நிலைமை குறித்து பேசினேன். அங்கு ராணுவ மற்றும் கடற்படையினரின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன். கேரள வரலாற்றில் இதுவரை நடக்காத அளவிலான துயரம் இது என்பதால், தேவையான அனைத்து விதமான நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறும் அவரிடம் வலியுறுத்தியுள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ராகுல் காந்தி, ‘கேரள மக்களின் நிலைமையை நினைத்து நான் மிகவும் கவலையடைகிறேன். தொடர்ந்து அங்கு வெள்ள நீரின் அளவு அதிகரித்து வருகிறது. பல்லாயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிவாரண முகாம்கள் நிரம்பி வழிகின்றன. பலர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த உறவுகளை இழந்து வாடி வருகின்றனர். நாம் முன் வந்து உதவி செய்வதற்கான நேரம் இது. கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவி செய்யுங்கள்’ என்று ட்விட்டரில் பதிவிட்டு, நிதி செலுத்துவதற்கான லிங்கையும் பகிர்ந்திருந்தார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் இந்த மழை, கேரள மாநிலத்தில் 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 60,000 மக்களுக்கும் மேல், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 8,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதாரம் ஆகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
10,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள், நூற்றுக்கணக்கான வீடுகள் கனமழையால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.