ஆர்.எஸ்.எஸ், இந்த நாட்டில் ஒரேயொரு அமைப்புதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது, ராகுல்
Bhubaneshwar: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில் எதிர்த்துப் போட்டியிடுவேன், அதே நேரத்தில் அவரை வெறுக்கமாட்டேன் என்று கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
புபனேஷ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த ராகுல், “என் கொள்கைகள், கோட்பாடுகளில் மோடிக்கு உடன்பாடு இருக்காது. அதைப்போலவே அவருடையதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, நான் அவரை முழு மூச்சுடன் எதிர்ப்பேன். அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஆனால், எக்காரணம் கொண்டும் அவரை நான் வெறுத்துவிட மாட்டேன். தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு மோடிக்கு முழு உரிமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்றார்.
அவர் தொடர்ந்து, “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-விடமிருந்து வந்த தூற்றுதல்கள்தான் என்னை ஒரு நல்ல அரசியல்வாதியாகவும், மனிதனாகவும் மாற்றியது. இந்த காரணத்தினால்தான், பிரதமர் மோடி என்னை தூற்றினால் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது போல இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அனைத்து மட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் ஊடுறுவல் உள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அமைப்புகளிலும் அந்தக் கொள்கை உள்ளே நுழையப் பார்க்கிறது.
ஆர்.எஸ்.எஸ், இந்த நாட்டில் ஒரேயொரு அமைப்புதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. மற்ற அமைப்புகளுக்குள் நுழைந்து எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது” என்று பேசினார்.