This Article is From Jun 17, 2020

“எதுக்கு ஒளிஞ்சிட்டு இருக்காரு..?”- இந்திய - சீன மோதல்; மோடியை டார்கெட் செய்யும் ராகுல்!

காங்கிரஸ் தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா

“எதுக்கு ஒளிஞ்சிட்டு இருக்காரு..?”- இந்திய - சீன மோதல்; மோடியை டார்கெட் செய்யும் ராகுல்!

ட்விட்டரில் இப்படி காட்டமான பதிவிட்டு சில மணி நேரங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார் ராகுல்.

ஹைலைட்ஸ்

  • திங்கட் கிழமை இரவு மோதல் சம்பவம் நடந்துள்ளது
  • இந்தியத் தரப்பில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்
  • சீனத் தரப்பில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
New Delhi:

இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக்கின் கல்வான் பகுதியில், சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ராணுவ உள்வட்டாரத் தகவல் வந்துள்ளது. அதேபோல சீன ராணுவத் தரப்பிலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து விமர்சனம் செய்துள்ளார். 

“ஏன் பிரதமர் அமைதியாக இருக்கிறார்? எதற்கு அவர் மறைந்து கொள்கிறார்? நடந்தது வரைக்கும் போதும். என்ன நடந்தது என்பது நமக்குத் தெரிந்தாக வேண்டும். நமது ராணுவ வீரர்களை சீனா எப்படி கொலை செய்யலாம். எப்படி அவர்கள் நம் நிலத்தை ஆக்கிரமிக்கலாம்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. 

ட்விட்டரில் இப்படி காட்டமான பதிவிட்டு சில மணி நேரங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார் ராகுல். அதில் அவர் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர், “இரண்டு நாட்களுக்கு முன்னர் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். சீனா நம் நிலத்தைப் பிடிங்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. எதற்காக நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் பிரதமரே? எங்கு ஒளிந்திருகிறீர்கள்? நீங்கள் வெளியே வாருங்கள். மொத்த நாடும் உங்களோடுதான் துணை நிற்கிறது. நாங்கள் அனைவரும் உங்களோடுதான் இருக்கிறோம். வெளியே வந்து உண்மையைச் சொல்லுங்கள். பயப்பட வேண்டாம்,” என்று அதிரடியாக பேசியுள்ளார். 

காங்கிரஸ் தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா, “இந்தய ராணுவத் தரப்பு, சீனாவுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் இறையாண்மை எந்த காரணத்திற்காகவும் விட்டுத் தரப்படாது என்பதை உறுதி கூறுகிறேன்,” என்று கேரள பாஜக தொண்டர்களுக்கு மத்தியில் பேசியுள்ளார். 

இந்திய - சீன மோதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

‘இந்திய மற்றும் சீனத் துருப்புகள், கல்வான் பகுதியில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மோதலில் ஈடுபட்டன. இந்த உரசல் போக்கினால், பதற்றமான சூழலில் பணியில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள், மிகவும் உயரமான பகுதியில் குறைவான வெப்பநிலை கொண்ட இடத்தில் காயமுற்றனர். அவர்கள் மரணமடைந்துள்ளார்கள். இதன் மூலம் இந்த மோதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்திய ராணுவம், நாட்டின் இறையாண்மையையும் நில உரிமையையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது,' என்று இந்த அதிர்ச்சிகர மோதல் சம்பவம் பற்றி கூறியுள்ளது இந்திய ராணுவம். 

இது குறித்து வெளியவுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, “சீனத் தரப்பு தான்தோன்றித் தனமாக எல்லையில் உள்ள கட்டுப்பாட்டையும் நடைமுறையையும் மீறி செயல்பட்டதே, 15 ஜூன், 2020 அன்று இரு தரப்பு மோதலுக்குக் காரணம். இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புகளும் பேசி போட்டுக் கொண்ட உடன்படிக்கையை சீன ராணுவம் பின்பற்றியிருந்தால் இந்த மோதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என்றார். 

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியான், “சீனத் தரப்பை தாக்கியதனால், இந்திய - சீன எல்லையில் மிக வன்முறையான சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சீனத் தரப்பு தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது. 

இந்த பதற்றமான சூழலில் இந்தியா பொறுப்புடன் நடந்து கொண்டு, தன் எல்லையில் உள்ள முன்னிலை துருப்புகளை கட்டுக்குள் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எல்லையைத் தாண்ட வேண்டாம் என்றும், பிரச்னையை வரவழைக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றும், தான்தோன்றித் தனமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால் இரு நாட்டு எல்லைப் பிரச்னை பெரிதாகிவிடும்” என்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். 


 

.