காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) இன்று ராஜஸ்தானின் உதய்பூரில் கட்சி சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 3 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று பேசியுள்ளார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ராகுல் தொடர்ந்து, ‘மோடி ஆட்சியில் ஒரு முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக்(Surgical Strike) நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக இருந்த போது, 3 முறை எதிரிகள் மீது ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆபரேஷனை மேற்கொண்டது.
மன்மோகன் பிரதமராக இருந்தபோது, அவரிடம் வந்த ராணுவம், ‘பாகிஸ்தான் நம் மீது தொடுத்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த அனுமதி தாருங்கள். இது ரகசியமாகவே இருக்கட்டும்' என்று கூறினர். அதற்கு மன்மோகன் சிங்கும் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், ராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைத்த மோடியோ, அதை அரசியலாக்கி விட்டார். ராணுவ நடவடிக்கை ஒன்றை அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார் மோடி.
பிரதமருக்கு, ராணுவத் துறையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியுமென்று நினைக்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சரைவிட, வெளியுறவு விவகாரங்களில் என்ன செய்வது என்பது தனக்குத் தெரியுமென்று நினைக்கிறார். அதைப் போல விவசாயத் துறை அமைச்சரைவிட, தனக்கு விவசாயம் குறித்து நன்றாக தெரியுமென்று நினைக்கிறார். அனைத்து அறிவும், தன் மூளையிலிருந்தே வருவதாக பிரதமர் கருதுகிறார்' என்று மோடியை வறுத்தெடுத்தார்.