This Article is From May 28, 2019

என்னவாகும் ராகுல் நிலைமை..?- பிரியங்கா சந்திப்பைத் தொடர்ந்து கூடும் காங். தலைவர்கள்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ், தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து போராடி வருகிறது. 

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவரை தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்குமாறு கட்சியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்று காலை அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளார் ராகுல். இதைத் தொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு தனது இல்லத்திற்கு கட்சியின் முக்கிய புள்ளிகளை வருமாறு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. 

இது குறித்த ‘டாப் 10' தகவல்கள்:

1.முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய் NDTV-யிடம் அளித்த பிரத்யேகப் பேட்டியின்போது, “நான் ராகுல், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவர் மனதை மாற்றிக் கொள்ளும் முடிவில் இல்லை. பல மூத்த தலைவர்கள் தேர்தலின் போது செயல்பட்ட விதம், அவருக்குப் பிடிக்கவில்லை” என்று வெளிப்படையாக பேசினார். காங்கிரஸ் காரிய கமிட்டியில் கோகாயும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2.கடந்த சனிக் கிழமை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலிடம், “ஒரு தலைவர் பயந்து ஓடுவாரா?” என்று கேட்கப்பட்டதாக கோகாய் நம்மிடம் கூறியுள்ளார். இந்தக் கேள்விக்கு ராகுல், “நான் எங்கும் ஓடவில்லை. நான் இன்னும் மூர்க்கமாக போராடுவேன். நான் காங்கிரஸ் தலைவராக இல்லையென்றால், அதன் கொள்கைக்காக பாடுபடுவேன்” என்று பதில் அளித்ததாக கோகாய் கூறியுள்ளார். 

3.நேற்று காங்கிரஸின் முக்கிய புள்ளிகளான அகமத் படேல் மற்றும் கே.சி.வேணுகோபாலைச் சந்தித்து, ‘கட்சிக்கு வேறு தலைவரைப் பாருங்கள்' என்று ராகுல் கூறியுள்ளார் எனத் தெரிகிறது. 

4.நேற்று கட்சியின் பல மூத்த தலைவர்களைப் பார்க்க ராகுல் மறுத்துவிட்டாராம். அவர்கள் மீது ராகுல், கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. 

5.ராகுல், தனது முடிவில் ஸ்திரமாக இருப்பதால் காங்கிரஸ் கட்சியும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. புதிய தலைவர், பதவியில் அமர ராகுல், பிரியங்கா மற்றும் சோனியா காந்தியின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். 

6.ராகுல், காரிய கமிட்டி சந்திப்பின்போது, பிரியங்கா அல்லது சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளாராம். நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்கள் இல்லாத போது காங்கிரஸ், சரியாக செயல்பட்டதில்லை என்பது வரலாறு.

7.நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மக்களவையில் எதிர்க்கட்சியாக வேண்டும் என்றால் கூட 55 இடங்கள் தேவைப்படும். 18 மாநிலங்களில் காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

8.சென்ற டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தலை சந்தித்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெற தவறிவிட்டது. இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. 

9.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ், தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து போராடி வருகிறது. 

10.ராகுல் காந்தியே, உத்தர பிரதேச அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். கடந்த 30 ஆண்டுகளாக காந்தி குடும்பத்துக்கு அந்தத் தொகுதியில் வெற்றி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 


 

.