This Article is From Jun 20, 2020

சீனப் பதற்றம் பற்றி மோடியின் அனைத்துக் கட்சி கூட்டம்: ராகுலின் 2 நெத்தியடி கேள்வி!

“நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவி வரவில்லை. நம் நிலப்பரப்பையும் யாரும் ஆக்கிரமிக்கவில்லை"- மோடி

1. எதற்காக நம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்? 2. எந்த இடத்தில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்? - ராகுல் கேள்வி

ஹைலைட்ஸ்

  • நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் மோடி
  • அதில் சோனியா காந்தி, அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியிருந்தார்
  • மோடியும், லடாக் பதற்றம் பற்றி விளக்கம் கொடுத்திருந்தார்
New Delhi:

இந்த வாரத் தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலைத் தொடர்ந்து, சீனாவுக்கு எதிரான மனநிலை தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் காங்கிரஸின் எம்பி ராகுல் காந்தி, மோடிக்கு இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, “நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவி வரவில்லை. நம் நிலப்பரப்பையும் யாரும் ஆக்கிரமிக்கவில்லை. இந்தியா அமைதியையும் நட்பையுமே விரும்புகிறது. அதே நேரத்தில், இறையாண்மையை நிலைநிறுத்துவதுதான் எங்களின் உச்சபட்ச நோக்கம்,” என்றார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், தன் ட்விட்டர் பக்கத்தில், “சீனாவின் மூர்க்கதனத்திற்கு இந்தியாவின் நிலப்பரப்பை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. சீனாவின் நிலத்தில்தான் அதன் ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்றால், 1. எதற்காக நம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்? 2. எந்த இடத்தில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 
 

நேற்று வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் சோனியா, “இந்திய - சீன எல்லைப் பதற்றத்தைப் பொறுத்த வரையில் எங்களுக்கு பல விஷயங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட சீக்கிரமே நடத்தப்பட்டிருக்கலாம். அரசிடம் எங்களுக்கு சில கேள்விகள் உள்ளன. எந்த தேதியில் சீன ஊடுருவல் நடந்தது? அரசுக்கு அது பற்றி எப்போது தெரிந்தது? மே 5 ஆம் தேதி நடந்ததா அல்லது அதற்கு முன்னரா? அரசுக்கு எல்லையின் செயற்கைக்கோள் படங்கள் முறையாக கிடைப்பது இல்லையா? உளவுத் துறையின் தோல்வியே இந்த தாக்குதலுக்குக் காரணமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அவர் முடிவாக, “எல்லையில் சீனா, தான் முன்னர் வகித்த எல்லைக் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கும் என்றும், தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்பிச் செல்லும் என்றும், இயல்பு நிலை நிலைநாட்டப்படும் என்றும் அரசு உறுதியளிக்க வேண்டும்,” என்றார் தீர்க்கமாக.

.