This Article is From Dec 13, 2019

"ரேப் இன் இந்தியா சர்ச்சை": பிரதமர் நரேந்திர மோடியே மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாமில் தீவிரமாக நடந்து வரும் போராட்டத்தை திசை திருப்பும் வகையில், தன் மீது குறிவைப்பதாக அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தியின் ‘ரேப் இன் இந்தியா’ கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியே மன்னிப்பு கேட்க வேண்டும், இவர்களிடம் ஒருபோதும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாமில் தீவிரமாக நடந்து வரும் போராட்டத்தை திசை திருப்பும் வகையில், தன் மீது குறிவைப்பதாக அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களில் போராட்ட சூழல்நிலவி வருவதற்கும், இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்ததற்காகவும், டெல்லியை இந்தியாவின் கற்பழிப்பு தலைநகரம் என்று குறிப்பிட்டதற்காகவும் பிரதமர் மோடியே மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

எனது தொலைபேசியில் ஒரு வீடியோ கிளிப் உள்ளது. அதில், 'மோடி டெல்லியை கற்பழிப்பின் தலைநகரம்' என்று குறிப்பிடுவதை நீங்கள் கேட்கலாம். அதை நான் ட்வீட்டரில் வெளியிடப்போகிறேன். அதன் மூலம் அனைவரும் அதனை பார்க்க முடியும். 

வடகிழக்கு மாநிலங்களின் அமைதியை சீர்குலைத்த அமித் ஷாவும், மோடியும் அதன் கவனத்தை திசை திருப்ப என்னைப் பற்றி பேசுகிறார்கள் என்று அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார். 

முன்னதாக, ஜார்கண்டில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். அதில், நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா' என்று கூறுகிறார். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், ‘ரேப் இன் இந்தியாவாக' இருக்கிறது என்று விமர்சித்தார். 

உத்தர பிரதேசத்தில் நரேந்திர மோடி அரசின் எம்எல்ஏவால் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். பின் அந்த பெண் ஒரு விபத்தில் சிக்கினார். இது குறித்து ஒரு வார்த்தை கூட நரேந்திர மோடி பேசவில்லை. 

'மகள்களை காப்பாற்றுங்கள், மகள்களுக்கு கற்பியுங்கள்' என்று நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால், யாரிடம் இருந்து மகள்களை காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் கூறவில்லை. அவர்கள் பாஜக எம்.எல்.ஏக்களிடம் இருந்து தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும், அண்மையில் ரகுராம் ராஜனை சந்தித்ததாகவும், அப்போது, அமெரிக்கா, ஐரோப்பாவில் யாரும் இந்தியாவைப் பற்றி பேசவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். யாரும் பொருளாதாரம் பற்றி பேசவில்லை. 

மாறாக வன்முறைகள், பிரிவினைகள் குறித்தே பேசப்படுகிறது. நமது நற்பெயருக்கு முற்றிலும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நற்பெயர் ஏன் இழக்கப்படுகிறது, ஏன் வேலையின்மை ஏற்பட்டுள்ளது என்று மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். 

.