This Article is From Jul 11, 2019

நாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங்!

“கேரளாவில் உள்ள விவசாயிகளின் பரிதாபத்திற்குரிய நிலை குறித்து அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்."

“விவசாயிகள் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு முக்கிய காரணம், பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள்தான்"- ராஜ்நாத் சிங்

New Delhi:

காங்கிரஸ் தலைவர் பதவியைத் துறந்த பின்னர், ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் முதன்முதலாக பேசியுள்ளார். தனது தொகுதியான வயநாட்டில், விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து ராகுல், நாடாளுமன்றத்தில் பேசினார். அவரின் பேச்சுக்கு ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்வாதம் செய்தார்.

முதலில் பேசிய ராகுல், “கேரளாவில் உள்ள விவசாயிகளின் பரிதாபத்திற்குரிய நிலை குறித்து அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். வயநாட்டில் உள்ள ஓர் விவசாயி கடன் தொள்ளைத் தாங்கமுடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

பல பணக்கார வியாபாரிகளுக்கு சலுகைகளை அள்ளி வீசும் இந்த அரசு, விவசாயிகளின் நிலை குறித்து கவலை கொள்வதில்லை. எதற்கு இந்த வெட்கத்திற்க்குரிய இரட்டை நிலைப்பாடு. ஏன் விவசாயிகளை இரண்டாம் பட்சமாக அரசு நடத்துகிறது. விவசாயிகளைக் காக்க இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்ப செலுத்த முடியவில்லை என்றால், அவர்களை அச்சுறுத்தும் முறையை உடனே கைவிட வழிவகை வேண்டும். இது குறித்து ரிசர்வ் வங்கிக்கு அரசு, அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று பேசினார். 

இதற்கு எதிர்வினையாற்றிய ராஜ்நாத் சிங், “விவசாயிகள் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு முக்கிய காரணம், பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள்தான். பாஜக அரசு ஆட்சியில் அமர்வதற்கு முன்னர்தான் அதிக விவசாயிகள் தற்கொலை நடந்தது. 

கடந்த சில ஆண்டுகளில் விவசாயிகள் பிரச்னை ஆரம்பித்துவிடவில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கிசான் மன் தன் யோஜனா திட்டம் மூலம், விவசாயிகளின் வருவாய், 20 முதல் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று பதிலடி கொடுத்தார். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், படுதோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ட்விட்டரிலும் தன்னை ‘காங்கிரஸ் தலைவர்' என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு பதில் ‘காங்கிரஸ் எம்.பி' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். 


 

.