This Article is From Apr 30, 2019

‘வருத்தம் அல்ல மன்னிப்பு கேட்கிறேன்!’- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி உறுதி

ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கோருவார்’ என்று கூறினார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கவுல் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குக் கீழ் இன்று இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

New Delhi:

‘சவுகிதார், திருடன்' என்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி கூறியது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கோருவார்' என்று கூறினார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கவுல் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குக் கீழ் இன்று இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அப்போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ராகுல் காந்தி சார்பில் ஆஜராகி, ‘வருத்தம் என்பதற்கு நான் அகராதியில் என்ன அர்த்தம் என்று தேடிப் பார்த்துவிட்டேன். அதை மன்னிப்பு என்றும் சொல்லலாம்' என்று வாதாடினார்.

இந்த வாதத்திற்கு நீதிமன்றம், ‘உங்கள் கட்சிக்காரர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்துகொள்வது எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது' என்றது. 

இதற்கு சிங்வி, ‘மீண்டும் இது குறித்து எனது கட்சிக்காரர் புதிய விளக்கத்தை தாக்கல் செய்வார். அதில் தெளிவாக மன்னிப்பு கேட்பார்' என்று விளக்கம் கொடுத்தார். 

இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், ‘ஊடகங்களில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கசிந்துள்ள ரகசிய ஆவணங்களை ஆதரமாக எடுத்துக் கொள்ளலாம்' என்று கூறியது. இதை மேற்கோள் காட்டி ராகுல், ‘சவுகிதாரான பிரதமர் மோடி ஒரு திருடன்' என்று கூறினார். 

இதற்கு பாஜக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து ராகுல், ‘அரசியல் பிரசாரங்களின் போது ஒரு வேகத்தில் அப்படி சொல்லிவிட்டேன். அதற்கு வருந்துகிறேன்' என்று விளக்கம் கொடுத்தார். 

இந்த விளக்கத்தை பாஜக தரப்பு வழக்கறிஞர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும், ‘மன்னிப்பு' கோரி ராகுல் புதிய விளகத்தை சமர்பிப்பார் என்று தெரிகிறது.

.