சுதந்திரக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை, நேரு-காந்தி குடும்பம்தான் பெரும்பான்மை சமயங்களில் வழிநடத்தி வருகிறது.
New Delhi: இந்தியாவின் முதல் பிரதமரும் ராகுல் காந்தியின் கொள்ளு தாத்தாவுமான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரை நினைவுகூறும் வகையில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்தப் படுதோல்வியைத் தொடர்ந்து ராகுல் பதிவிடும் முதல் ட்வீட் இதுதான். அவரின் ட்வீட்டர் மூலம் சொல்லியிருக்கும் கருத்து பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
“இந்தியாவைப் போன்ற பல ஜனநாயக நாடுகள், சீக்கிரமாகவே சர்வாதிகாரப் போக்குக்கு மாறிவிட்டன. நேருவின் நினைவு நாளில், சுதந்திரமான ஸ்திரமான நவீன அமைப்புகளை உருவாக்கி, கடந்த 70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ததை நினைவு கூறுவோம்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார் ராகுல்.
கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் காரிய கமிட்டி முன்னர் ராகுல், “நான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார். ஆனால், அவரது ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்கவில்லை. இதை உறுதி செய்யும் விதத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘காங்கிரஸ் தலைவர்' என்ற விளக்கம் அப்படியே இருக்கிறது.
தற்போதைய சூழலில் ராகுல், கட்சித் தலைவர் பதவியை “விட்டுத் தரப்போவதில்லை” என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.
ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. “இது மாற்றத்துக்கான நேரம்” என்பதை இருவரும் உணர்ந்திருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள், கடந்த இரண்டு மூன்று நாட்களாக ராகுலை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி வருகிறார்களாம். ‘ராஜினாமா செய்ய வேண்டாம். ஆனால், கட்சியில் பல விஷயங்களை மாற்றியமைக்கலாம்' என்றும் அவர்கள் அறிவுரையும் கூறியுள்ளார்களாம்.
சனிக்கிழமை நடந்த காரிய கமிட்டி சந்திப்பின்போது ராகுல், கட்சிக்காரர்கள் மத்தியில் மிகவும் கறாராக பேசினார். அவர் யாரையும் குறிப்பிடாமல், “கட்சி வெற்றி பெறுவதைவிட, தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் தங்கள் பிள்ளைகள் வெற்றி பெற வேண்டும் என்றும் நினைத்தார்கள். இது பெரும் பின்னடைவாக அமைந்தது” என்று ராகுல் விரிவாக பேசியுள்ளார்.
கூட்டத்தின் போது முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “ராகுல், தலைவர் பதவியை ராஜினாமா செய்தால் பல தொண்டர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார் என்று நம்மிடம் சொல்லப்படுகிறது.
கூட்டத்தின் போது ராகுல், “காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவராக ஒருவர் வர வேண்டும் என்று அவசியமில்லை” என்று பேசியிருக்கிறார். உடனே நிர்வாகிகள், பிரியங்காவின் பெயரை முன்மொழிந்துள்ளனர். உடனே, “என் சகோதரியை இதற்குள் இழுக்க வேண்டும்” என்று ராகுல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் ராகுலே, உத்தர பிரதேச அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். வயநாடு தொகுதியில் மட்டும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கவில்லை என்றால், மக்களவையில் இருந்திருக்க மாட்டார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ், 17 மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட ஜெயிக்கவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களும் இதில் அடங்கும். டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை, நேரு-காந்தி குடும்பம்தான் பெரும்பான்மை சமயங்களில் வழிநடத்தி வருகிறது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு இந்த குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரியிடம் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அவரது தலைமை பொறுப்புக்குக் கீழ் காங்கிரஸ் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியை தலைவராக பொறுப்பேற்க வைத்தனர்.