This Article is From Mar 25, 2019

“ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000”- ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதி

இந்தத் திட்டம் சாத்தியமானதுதான். இது குறித்து நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாக ஆய்வு செய்து வருகிறோம்- ராகுல் விளக்கம்

21 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவில் வறுமை இருப்பதை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியாது- ராகுல் பேச்சு

New Delhi:

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிப்போம்' என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். 

அவர் இது குறித்து இன்று பேசுகையில், ‘இந்தியாவில் இருக்கும் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்ற திட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 21 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவில் வறுமை இருப்பதை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியாது. வறுமைக்கு எதிரான இறுதிகட்டப் போர் ஆரம்பமாகியுள்ளது. 

‘நியூதம் அய் யோஜனா' திட்டத்துக்குக் கீழ், குறைந்தபட்ச நிதியுதவியானது, நேரடியாக ஏழை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 5 கோடி குடும்பங்கள் அல்லது 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேற்றப்படுவர். 

இந்தத் திட்டம் சாத்தியமானதுதான். இது குறித்து நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாக ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தைக் கொடுப்போம் என்றோம். அதைச் செய்தோம். அதைப் போலவே இந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவோம்' என்று உறுதியளித்தார். 

முதற்கட்ட லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சூடுபிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தி, குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து பேசியுள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் இறுதிவடிவை முடிவு செய்ய காங்கிரஸ் செயற்குழு இன்று கூடியுள்ளது. 
 

.