இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளதா? ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் கேள்வி!
New Delhi: லடாக்கில் இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளதா? பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஹார் மக்கள், பாஜக தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் உரையாடினார். அப்போது, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடுத்து தமது எல்லையை பத்திரமாக பாதுகாக்க தெரிந்த நாடு என உலக அளவில் இந்தியாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் அவர் பேசும்போது "காஷ்மீரின் உரி மற்றும் புல்வாமா பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதலும் வான்வழி தாக்குதலும் நடத்தப்பட்டது. அதனால் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை வலுவாக இருப்பதாகவும் தன் எல்லையை பாதுகாக்கத் தெரிந்த நாடு என்றும் உலக அளவில் பேசப்படுகிறது" என்றார்.
இந்நிலையில், அமித் ஷா பேச்சு தொடர்பான செய்தியை இணைத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டரில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், லடாக்கில் இந்தியா-சீனா நிலைப்பாட்டைக் குறிப்பிடும் புகழ்பெற்ற உருது-பாரசீக கவிஞர் மிர்சா காலிப்பின் உருவாக்கத்தை குறிப்பிட்டு,
"எல்லையில் நிலவும் உண்மையான நிலவரம் என்னவென்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அனைவரின் இதயத்தையும் மகிழ்ச்சிப் படுத்த இந்த சிந்தனை நல்ல யோசனையாக இருக்கும்" என ராகுல் கிண்டலாக தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் ட்விட்டிற்கு ஒரு சில மணி நேரத்தில் பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "கையில் வலி இருக்கும்போது சிகிச்சை பெறலாம், ஆனால் கையே வலியாக இருக்கும்போது ஒருவர் என்ன செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 'கை' என்பது ராகுல் காந்தியின் கட்சியான காங்கிரஸின் சின்னமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரிகளை 20ம் நூற்றாண்டில் கவிஞர் மன்சார் லக்னவி எழுதியுள்ளார். 'இதயத்தை' 'கையால்' மாற்றுவதன் மூலம் மேம்படுத்தினார்.
இந்நிலையில், ராஜ்நாத் சிங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளதா? என்பதை நேரடியாக கேட்கிறேன் என ராகுல் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் பகுதி எல்லையில் நிகழ்ந்த மோதலால் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எல்லைப் பகுதியில் நிலவும் பதற்ற சூழலுக்கு அமைதியாக தீர்வு காண்பது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.