This Article is From Aug 12, 2019

’நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’: கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்!

உத்தர பிரேதசத்தின் அமேதி தொகுதியை தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டார்.

’நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’: கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்!

தனது தொகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று ராகுல் பார்வையிட்டார்.

New Delhi:

கேரளாவின் வயநாடு தொகுதியில் முகாமிட்டுள்ள ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் நிவாரண பொருட்கள் அளிக்குமாறும் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக ராகுல் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "என்னுடைய வயநாடு மக்களவைத் தொகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவதால், அனைவரும் நிவாரண பொருட்கள் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், அனைவரும் அளிக்கும் நிவாரணப் பொருட்கள் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சேகரிப்பு மையம் மூலம் பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 
 



மேலும், தண்ணீர் பாட்டில்கள், பாய்கள், போர்வைகள், உள்ளாடைகள், குழந்தைகளின் ஆடைகள், செருப்புகள், நாப்கின்கள், சோப்புகள், பிரஷ்கள், பற்பசை, டெட்டோல், சோப் பவுடர், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் உள்ளிட்ட பொருட்கள் நமக்கு அவசரமாக தேவை என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, நேற்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே பொதுகல்லுவில்  அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர் அங்கு தங்கி இருந்தவர்களிடம் பாதிப்பை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கவலப்பரா கிராமத்துக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார். மலப்புரம் மாவட்டத்தின் 3 சட்டசபை தொகுதிகள் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் வருகின்றன. அங்கு சேத பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். 


இந்நிலையில், 2-வது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வரும் ராகுல் காந்தி, நிவாரண பொருட்களையும் வழங்கினார். 

இதனிடையே, கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மிக கனமழை பெய்து வந்த நிலையில், இன்று மழையின் தீவிரம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் பெய்த கனமழையால், 72 பேர்
உயிரிழந்துள்ளனர்.   

(with inputs from agencies)

.