நன்றி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் திறமையின்மையை நீங்கள் நன்றாக மறைக்கிறீர்கள்- ராகுல்காந்தி ட்விட்
New Delhi: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்ததுணவர்கள். நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், " ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்" (இந்த முறையும் ட்ரம்ப் அரசுதான்) என்று முழுக்கமிட்டு மக்களிடம் ஆதரவு கோரினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் சுற்றுப்பயணமாக வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' என கூறவில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் ‘‘தயவுசெய்து, பிரதமர் மோடி கூறியதை கூர்ந்து கவனியுங்கள். பிரதமர் கூறியதை நான் கவனித்தேன். ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார் " என்று பிரதமர் கடந்த காலத்தைப் பற்றியே பேசுகிறார். அவர் நேர்மையாக, சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் சரியான முறையில் எதையும் வெளிப்படுத்த வேண்டும்.'' என தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
நன்றி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் திறமையின்மையை நீங்கள் நன்றாக மறைக்கிறீர்கள். பிரதமர் மோடியின் ஒரு சார்பு ஒப்புதலால் ஜனநாயக கட்சியினர் இந்தியாவுடன் கொண்டிருந்த இணக்கமான சூழலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிக்கலை தீர்க்க நீங்கள் தலையிடுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விவகாரம் பற்றி பேசும் நீங்கள் பிரதமர் மோடிக்கு ராஜதந்திரம் தொடர்பாக பாடம் எடுங்கள்'' என ராகுல் காந்தி கூறியுள்ளார்.