This Article is From Feb 26, 2019

‘’விமானப்படை பைலட்களுக்கு சல்யூட்’’ - ராணுவத்தின் அதிரடியை பாராட்டிய ராகுல்

தீவிரவாதிகள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை பல்வேறு அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.

‘’விமானப்படை பைலட்களுக்கு சல்யூட்’’ - ராணுவத்தின் அதிரடியை பாராட்டிய ராகுல்

ராணுவத்தை பாராட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

New Delhi:

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இன்று அதிகாலை 3.30-க்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

12 மிராஜ் 2000 ரக போர் விமானங்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலை அரசியல் தலைவர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், ‘'வாவ்!! இந்த தாக்குதல் உண்மையாக இருந்தால் மிகப்பெரிய அளவில் தீவிரவாதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக நான் காத்திருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘' இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு சல்யூட்'' என்று பதிவிட்டுள்ளார்.

பிகார் முன்னாள் அமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''வீரம் மிக்க விமானப்படை பைலட்டுகளுக்கு சல்யூட். உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார். 

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில், ''இந்திய விமானப்படைக்கு சல்யூட். வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், ''பாகிஸ்தானில் உள்ள இலக்குகளை தாக்கி இந்தியாவை பெருமை கொள்ள வைத்த விமானப்படை வீரர்களுக்கு சல்யூட்'' என்று கூறியுள்ளார்.

கடந்த 14-ம்தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இன்று காலை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதல் நடந்தபோது, வீரத்தியாகம் செய்த துணை ராணுவத்தினரின் தியாகம் வீண் போகாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க - "ராணுவம் அதிரடியைத் தொடர்ந்து பிரதமர் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்"

.