பிரதமர் மோடி இந்திய அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
New Delhi: உலகக்கோப்பை தொடர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி 100 கோடிஇதயங்கள் உடைந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
இந்திய அணியின் தோல்வி 100 கோடி மக்களின் இதயத்தை உடைத்து விட்டது. இருப்பினும் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடி எங்களது அன்பையும், மரியாதையையும் வென்றிருக்கிறது. வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். இதேபோன்று பிரதமர் மோடியும் உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக செயல்பட்டதென்று வாழ்த்துக் கூறியுள்ளார்.
மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது -
இந்திய அணியின் தோல்வி அதிருப்தி அளிக்கிறது. இருந்தாலும் வெற்றி பெறுவதற்காக கடைசி வரையில் வீரர்கள் கடுமையாக போராடினர்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக விளையாடி நமக்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றியும், தோல்வியும் நம் வாழ்க்கையில் சகஜம்தான். வருங்காலத்தில் வெற்றிகளை குவிப்பதற்கு இந்திய அணியை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்ததாக களம் இறங்கினர். 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.