பாஜகவில் வடக்கன் சேர்ந்தது தொடர்பாக ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
Raipur: காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் வடக்கன் பாஜகவில் சேர்ந்தது குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் ஒன்றும் பெரிய தலைவர் இல்லையே என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், சோனியா காந்தியின் உதவியாளருமாக இருந்த வடக்கன் பாஜகவில் சேர்ந்துள்ளார். இதுபற்றி சத்தீஸ்கருக்கு வந்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராகுல் ''வடக்கனா? அவர் ஒன்றும் பெரிய தலைவர் இல்லையே'' என்று கூலாக பதில் அளித்தார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா இருந்தபோது, ஊடக குழு அமைக்க அவருக்கு உதவியாக இருந்த காங்கிரஸ் செய்திதொடர்பாளர் வடக்கான் நேற்று பாஜகவில் இணைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, பாகிஸ்தான பாலக்கோட்டில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு எதிராக ஒரு கட்சி முடிவு எடுக்கும்போது, எனக்கு அந்த கட்சியை விட்டு வெளியில் வருவதை தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் வளர்ச்சி குறித்த நரேந்திர மோடியின் வாக்குறுதிகளை தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கான் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், பாஜக அவருக்கு ஒரு தொகுதியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.