இந்த நிகழ்ச்சில் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.
New Delhi: முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரணாபுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சில் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
ராகுல் மற்றும் சோனியா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், காங்கிரஸ் சார்பில், ஆனந்த் ஷர்மா, அகமத் படேல், புபேந்திர சிங் ஹூடா, ஜனார்த்தன் திவேதி, சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்திக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். ஆனால், அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக, 303 இடங்களை வென்றது. காங்கிரஸின் படுதோல்விக்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல். அவர் கட்சித் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததில் இருந்தே, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதைத் தவிர்த்து வருகிறார். தனது சமூக வலைதள பக்கங்களிலும் அவர் துடிப்பாக செயல்படுவதில்லை. இந்நிலையில்தான் அவர் பிரணாபுக்கு, விருது கொடுக்கப்படும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
பிரணாப் முகர்ஜி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ் தலைமை, அவரின் இந்த முடிவை ரசிக்கவில்லை. அந்த சமயத்தில் இருந்தே அவருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சுமூகமான உறவு இருக்கவில்லை.