This Article is From Feb 22, 2020

பாதுகாப்புப் பணியில் ஸ்மார்ட் ஒர்க் செய்யும் ரயில்வே போலீசார்! வைரலாகும் வீடியோ!!

செக்வே எனப்படும் ஒருநபர் மட்டுமே செல்லக்கூடிய வாகனம், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உதவிக்கரமாக உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்புப் பணியில் ஸ்மார்ட் ஒர்க் செய்யும் ரயில்வே போலீசார்! வைரலாகும் வீடியோ!!

கோவாவின் மாட்காவோன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசார்.

New Delhi:

ரயில்வே நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் ஸ்மார்ட் ஒர்க் செய்து அசத்துகின்றனர். இதுதொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சர் பதிவிட, வீடியோ வைரலாகி விட்டது.

கோவா மாநிலம் மாட்காவேன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தொழில்நுட்ப முறையில் பாதுகாப்புப் பணிகளைச் செய்கின்றனர். அவர்கள் செக்வே எனப்படும் ஒருநபர் மட்டுமே செல்லும் வாகனத்தில் ஏறிக்கொண்டு, ரயில் நிலையத்தைக் கண்காணிக்கின்றனர்.

இதில் வேகத்தைக் கூட்ட மற்றும் குறைக்க வசதிகள் உள்ளன. இதனால் ரயில்வே போலீசார் ஓடிக்கொண்டே பாதுகாப்புப் பணிகளைச் செய்யும் அவசியம் இருக்காது.

இதுதொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், 'கோவாவின் மாட்காவோன் ரயில் நிலையத்தில் செக்வே வாகனத்தின் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த வாகனத்தில் வேகமாகப் பயணிக்க முடியும். இது போலீசாரின் பணியை இன்னும் சிறப்பாக மாற்றுகிறது' என்று கூறியுள்ளார். 

அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசும் போலீசார்,'பயணத்தின்போது முன்பின் தெரியாதவர்கள் ஏதேனும் சாப்பிட அளித்தால் அதனை வாங்காதீர்கள். அது விஷமாக இருக்கலாம்' என்று எச்சரிக்கிறார். இதேபோன்று, கேட்பாரற்று ஏதேனும் பொருள் கிடந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்றும், அந்த பொருள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று செக்வேயில் பறக்கும் காவலர் அறிவுறுத்துகிறார். 

ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற அறிவிப்பும் காவலர் தரப்பிலிருந்து வெளியாகிறது.

செக்வே மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது கடந்த ஆண்டு மே மாதத்தின்போது அகமதாபாத்தின் கலுப்பூர் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் இந்த வாகனங்களைப் பயன்படுத்துவார்கள். இது ப்ளாட்பாரங்களில் மணிக்கு 8 முதல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். கண்காணிப்பு பணிகளின்போது இந்த வாகனம் போலீசாருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். 

கலுப்பூர் ரயில் நிலையத்தில் மொத்தம் 6 செக்வே வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. 

.