தமிழில் ரயில்வே துறை தேர்வு! திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
ரயில்வே துறை சார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்காக நடத்தப்படும் (ஜிடிசிஇ) போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், நூறு சதவீதம் 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, 'தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
மேலும், ரயில்வேயில் நடைபெறும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள்' (GDCE) அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.
'குரூப் சி' பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை', தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் 'குரூப் சி' தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ரயில்வே துறை சார்ந்த போட்டித் தேர்வான ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத தடையில்லை என்று ரயில்வே வாரியம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வே துறை சார்ந்த தேர்வை மாநில மொழியில் நடத்தலாம் என்ற அறிவிப்பு திமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ரயில்வே துறை சார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திமுக போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழ் மொழிக்காக தொடர்ந்து திமுக உறுதியுடன் போராடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.