This Article is From Jul 05, 2018

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டனம்

ஆங்கில மொழி பயன்பாட்டில் உள்ள இந்திய இரயில்வே இணைய தளத்தில், இந்தி மொழி வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வாடிக்கையாளர் சங்கத்தினர் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டனம்
New Delhi:

புதுடில்லி: ஆங்கில மொழி பயன்பாட்டில் உள்ள இந்திய இரயில்வே இணைய தளத்தில், இந்தி மொழி வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வாடிக்கையாளர் சங்கத்தினர் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் உள்ளது. இதனை எதிர்த்து இந்திய இரயில்வே துறைக்கும், ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்ட இரயில்வே வாடிக்கையாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர்.

“ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இந்தி மொழி வாசகங்கள் திணிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்தி மொழியில் தனி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இருக்கும் போது, ஐ.ஆர்.சி.டி.சி-யின் பொது இணையதளத்தில் இந்தியை திணித்திருப்பது ஏன்? 1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அலுவல் மொழிகள் சட்டம் தமிழ்நாடு மக்களுக்கு பொருந்தாது” என இதுப்பற்றி குழு தலைவர் பி.எட்வேர்டு ஜெனி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “இந்தி அல்லாத பிற மொழிகளை தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். இந்தியைத் திணிப்பது மொழி சமத்துவத்திற்கு எதிரானது. எங்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இந்தி அல்லாத பிற மொழி மக்களின் மீது இந்தி திணிப்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.

தவிர, ஆங்கில வழி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் உள்ள இந்தி வாசகங்களை நீக்கிவிட்டு, தமிழ் மொழி வாசகங்களை கொண்டுவர வேண்டும் எனவும் வாடிக்கையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனால், ஆறு கோடி தமிழ் மக்களும் பயன் பெறுவார்கள் என்பது அவர்களின் கருத்து.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், கன்னியாகுமரி மாவட்ட இரயில்வே வாடிக்கையாளர்கள் சங்கதினர், முன்பதிவு இல்லாத பயணசீட்டை தமிழ் மொழியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றி கண்டது குறிப்பிடத் தக்கது.

.